தற்போதைய காலகட்டத்தில் உலகில் அனைத்திலுமே போட்டி நிலவுகிறது. சிறிய விடயங்களிலிருந்து பெரிய விடயங்கள் வரை எல்லாவற்றிலும் போட்டி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் உலகில் உயரமான கட்டிடங்கள் (Tallest Buildings) என்ற அடிப்படையிலும் போட்டி நிகழ்கிறது.
தனது நாட்டை உலகளாவிய ரீதியில் பெருமைபட வைக்கும் ஒரு நோக்கமாகவும் இது அமைகிறது. அந்தவகையில், உலகில் அதிக உயரமான கட்டிடங்களை கொண்ட நாடு சீனா ஆகும்.
உலகின் உயரமான 10 கட்டிடங்கள் (Top 10 tallest buildings in the world in Tamil) பற்றிய விபரங்ளை இனி பார்க்கலாம்.
10. சிடிக் கோபுரம் (CITIC Tower)
சீனா ஷுன் (China Zun) என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோபுரத்தின் அமைப்பு பணிகள் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் அனைத்து பணிகளும் 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டுள்ளன்.
இதன் உயரம் 527.7 மீட்டர் (1731 அடி 4 அங்குலம்) ஆகும். இக்கட்டிடம் சீனாவின் பீஜிங் (Beijing) எனும் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கட்டிடத்தில் 108 மாடிகள் உள்ளன. இக்கட்டிடம் சீனாவின் பண்டைய மது கொள்கலனின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிட பணிகள் முடிவிற்கு பிறகு காரியாலயங்கள், ஆடம்பர மனைகள் மற்றும் ஹோட்டல்கள் கொண்ட கலவையான பயன்பாட்டு கட்டிடமாக உபயோகிக்கப்படுகிறது.
9. டியான்ஜின் சிடிஎஃப் நிதி மையம் (Tianjin CTF Finance Centre)
இக்கட்டிடம் சீனாவின் டியான்ஜின் எனும் நகரத்தில் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இதன் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமான பணிகள் 2019 ஆம் ஆண்டளவில் முடிவடைந்துள்ளது.
இது 530 மீட்டர் (1740 அடி) உயரம் கொண்டது. இதில் 97 மாடிகளுடன் 4 நிலத்தடி மாடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 81 உயர்த்திகள் (Elevator) பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டிடத்தில் ஹோட்டல், மனைகள், அறைகள் மற்றும் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8. குவாங்ஷோ சிடிஎஃப் நிதி மையம் (Guangzhou CTF Finance Centre)
111 மாடிகளை கொண்டு வானை நோக்கி இருக்கும் இக்கட்டிடம் சீனாவில் குவாங்சோ எனும் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது 530 மீட்டர் (1740 அடி) உயரம் கொண்டது. இது சீனாவில் 3 வது உயரமான கட்டிடமாகும்.
இக்கட்டிடத்தில் 111 மாடிகளுடன் 5 மாடிகள் நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 95 உயர்த்திகள் உபயோகிக்கப்படுகின்றன.
இக்கட்டிடத்தில் கடைத்தொகுதி, மனைகள், அறைகள், காரியாலயங்கள், ஹோட்டல் போன்றவை காணப்படுகின்றன. இக்கட்டிடம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்மாண வேலைகளை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர்.
7. ஒரு உலக வர்த்தக மையம் (One World Trade Center)
இக்கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் (New York City) நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உயரமான கட்டிடமாக இருந்தபோதிலும், உலக அளவில் 7 வது இடத்தில் உள்ளது.
இதனுடைய மொத்த உயரமானது 541.3 மீட்டர் (1776 அடி) ஆகும். இக்கட்டிடத்தில் 104 மாடிகள் உள்ளன.
இதன் அமைப்பு வேலைகளுக்கு 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
இதன் நிர்மாண பணிகள் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி தொடங்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் 73 உயர்த்திகள் பொருத்தப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாத விமான தாக்குதலால் பழைய உலக வர்த்தக மையம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
அதன்பின், வடக்கு கோபுரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் புதிதாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.
6. லோட்டே உலக கோபுரம் (Lotte World Tower)
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் நிர்மாண பணிகள் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடங்கப்பட்டுள்ளன.
இக்கட்டிடம் தென்கொரியாவின் சியோல் (Seoul) எனும் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் ஹோட்டல்கள், மனைகள், தனியார் காரியாலயங்கள் மற்றும் கவனிப்பு தளங்கள் என்பன உள்ளன.
இதன் மொத்த உயரம் 554.5 மீட்டர் (1819 அடி) ஆகும். இதில் 123 மாடிகளும் நிலத்துக்கடியில் 6 மாடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
5. பின்ங் என் சர்வதேச நிதி மையம் (Ping An International Finance Centre)
உலகத்தில் உயரத்தில் 5 வது இடத்தில் இருக்கும் இக்கட்டிடம் சீனாவில் 2 வது இடத்தில் உள்ளது.
சீனாவில் குவாங்டாங் (Guangdong) எனும் மாகாணத்தில் ஷென்சேன் (Shenzhen) எனும் இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் மொத்தமாக 599.1 மீட்டர் (1966 அடி) உயரமுடையது. இக்கட்டிடத்தில் 115 மாடிகள் இருப்பதுடன் நிலத்திற்கு கீழ் 5 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
80 உயர்த்திகள் பயன்படுத்தப்படும் இக்கட்டிடத்தில் காரியாலயங்கள், ஹோட்டல்கள், மாநாட்டு கூடம் மற்றும் சில்லரை கடைகள் உள்ளன.
4. அப்ரஜ் அல் பெய்ட் கடிகார கோபுரம் (Abraj Al-Bait Clock Tower)
இது சவுதி அரேபியாவில் மக்கா எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டிடமாகும்.
அந்த உயரமான கட்டிடத்தை சுற்றி மேலும் 6 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, ஒரு தொகுதியாக அது காணப்படுகிறது.
நடுவில் இருக்கும் உயரமான கட்டிடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கடிகார முகம்தான் உலகிலேயே பெரிய கடிகார முகமாகும்.
அத்துடன், இக்கட்டிடம் உலகின் 4 வது உயரமான கட்டிடமாக உள்ளது. இதன் உயரம் 601 மீட்டர் (1972 அடி) ஆகும்.
இக்கட்டிடத்தொகுதியில் ஹோட்டல்களும் மனைகளும் அடங்கியுள்ளன. இத்தொகுதியின் கட்டுமான செலவு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
கடிகார கோபுரத்தில் 120 மாடிகள் உள்ளன. மேலும், 96 உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இக்கட்டிட அமைப்பு பணிகள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
3. ஷாங்காய் கோபுரம் (Shanghai Tower)
இக்கட்டிடம் சீனாவில் ஷாங்காயின் புடோங் (Pudong) எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இது 632 மீட்டர் (2073 அடி) உயரம் கொண்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
இக்கட்டிட கட்டுமான பணிகளுக்கு ஏறத்தாழ 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.
இக்கட்டிடம் 128 மாடிகளை கொண்டிருக்கிறது. அத்துடன், உலகிலேயே 2 வது அதிவேக உயர்த்திகள் இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் வேகம் செக்கனுக்கு 20.5 மீட்டர் (20.5m/s) ஆகும்.
2. மெர்டேக்கா 118 (Merdeka 118)
இந்த கட்டிடமானது மலேசியாவில் கோலா லாம்பூர் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது 678.9 மீற்றர் (2,227 அடி) உயரம் கொண்டது. 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கட்டிடத்தின் நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்துள்ளன. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் மொத்தமாக 118 மாடிகள் உள்ளன. இதற்காக, 87 உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கட்டிடம் கலவையான பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, வணிக வளாகம், ஹோட்டல்கள், கண்கானிப்பு தளங்கள் உட்பட பல பயன்பாட்டுக்காக இந்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
1. பூர்ஜ் கலீஃபா (Burj Khalifa)
உலகிலேயே உயரத்தில் முதலிடத்தை பிடிக்கும் இக்கட்டிடம் துபாயில் அமைந்துள்ளது.
இதன் உயரம் ஏறத்தாழ 828 மீட்டராகும் (2717 அடி). இதன் கட்டுமான பணிகள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
எனினும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
இதனை கட்டி முடிப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தில் மொத்தமாக 57 உயர்த்திகளும் 8 இயங்கும் படிக்கட்டுகளும் (Escalator) உள்ளன.
மொத்தமாக 163 மாடிகள் இருப்பதுடன் அவற்றில் 9 மாடிகள் கட்டிட பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இக்கட்டிடமானது ஹோட்டல்கள், ஆடம்பர மனைகள், அதி சொகுசு தங்குமிடங்கள், நூலகம், நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மேலும் பல அம்சங்களை கொண்டிருக்கின்றது.
முடிவுரை – Top 10 tallest buildings in the world in Tamil
இப்போது நீங்கள் 2024 இற்கான முதல் 10 உயரமான கட்டிடங்களை அறிந்துகொண்டீர்கள். எனினும், உலகத்தில் நிலவும் போட்டியின் காரணமாக எதிர்காலத்தில் இந்த கட்டிடங்கள் பின் தள்ளப்பட்டு முதல் நிலைக்கு மேலும் பல கட்டிடங்கள் அமைக்கப்படலாம்.
அவ்வாறு அமைக்கப்படும் பொழுது அதில் உள்ளடக்கப்படும் வசதிகளும் பயன்படுத்தப்படும் தொழினுட்பங்களும் மிக முதன்மையானதாக இருக்கும். அதேபோல, அதற்காக அறவிடப்படும் விலையும் மிக அதிகமாகத் தான் இருக்கப்போகிறது.
இவற்றை விட இன்னும் உயரமான கட்டிடங்கள் அமைக்கப்படுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
இந்த கட்டுரை உங்களுக்கு உயரமான கட்டிடங்களை பற்றி அறிய உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் பல பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள எமது வலைதளத்திற்கு தொடர்ந்து பிரவேசியுங்கள்.
Facebook, X, Instagram போன்ற எமது சமூக வலைத்தளப் பக்கங்களை Follow செய்யவும் மறந்துவிடாதீர்கள்.
இதையும் வாசிப்போம்:
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com