தமிழ் மொழி வரலாறு | History of Tamil Language in Tamil

History of Tamil Language in Tamil

உலகின் தொன்மை மொழியானது தமிழ் மொழி ஆகும். தனக்கென ஒரு தனித்துவத்தையும், சிறப்பினையும், பெருமைகளையும் கொண்டு விளங்குவதால் செம்மொழி என 2004 ஆம் ஆண்டு உலக ரீதியில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தமிழுக்கு ஈடு இணையான மொழி வேறெதுவுமே இல்லை என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

அத்தனை அருமை பெருமைகளை சொந்தமாக வைத்துள்ள பழமைவாய்ந்த மொழியே தமிழ். இத்தமிழ் மொழியை தோற்றுவித்தவர்கள் திராவிடர்கள் ஆவார்கள். சரி வாருங்கள் இனி தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தமிழ் வரலாறு (Tamil History in Tamil)

தமிழ் வரலாறு (Tamil History in Tamil) எனும் போது தமிழின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் என பலவகை தமிழ் செய்திகளை தருகின்றமையை குறிப்பிடலாம்.

ஓர் வரலாற்றை படைக்க சான்றுகளே முக்கிய பங்களிக்கிறன. அந்த வகையில், தமிழின் வரலாற்றை கூறுவதிலும் கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள், காலங்கள், கதைகள் மற்றும் காப்பியங்கள் என அனைத்தும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன எனலாம்.

முதலில் காலங்கள் அடிப்படையில் தமிழ் வரலாற்றை நாம் நோக்குவோம் வாருங்கள்.

சங்ககால தமிழ் வரலாறு

History of Tamil Language in Tamil
History of Tamil Language in Tamil

இயற்கை நெறிக்காலம் என போற்றப்படும் காலம் சங்க காலம் ஆகும். இக்கால மக்கள் இயற்கையுடன் பின்னிப்பிணைந்த வாழ்வையே மேற்க்கொண்டனர். இக்காலத்தில் தமிழின் வளர்ச்சியானது அருமையாக காணப்பட்டது.

இக்காலத்தில் முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்க்கலாயினர்.  அதே போல், புலவர்களும் இச்சங்கங்களின் ஊடாக தமிழ் இலக்கியங்களை அமைத்து தமிழை வளர்த்தனர்.

அத்துடன், புலவர்களின் பாடல்களை மன்னர்கள் வரவேற்று கொடை கொடுத்து மகிழ்வித்தனர்.

இக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளை படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக இலக்கியங்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பண்டைத்தமிழர்களின் காதல், போர், வீரம், கொடைச்சிறப்பு, ஆட்சி சிறப்பு, வணிகம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி தமிழ் மொழி மூலம் இலக்கியங்களாக தோற்றுவித்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு பெருமைகளையும் வரலாறுகளையும் கூறி தமிழ் தோற்றுவிக்கப்பட்ட சங்க இலக்கியங்களை நாம் பார்ப்போம்.

இலக்கியங்கள்

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க தமிழ் இலக்கியங்களாக திகழ்கின்றன. இவற்றை பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என்பர்.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை: எட்டுத்தொகை நூல்களில் “நல்” என்ற அடைமொழி பெற்று வரும் ஒரே நூல் (நல்+திணை) நற்றிணை ஆகும்.

இது ஒரு அகத்திணை நூலாகும். இப்பாடல்கள் அக்கால தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களை பற்றி இயம்புகின்றது.

தலைவன் பிரிவை தாளாது வாடும் தலைவியின் நிலை, தலைவன்  வரவை கணக்கிட்டு சுவற்றில் கோடிடும் பழக்கம், அவன் வரவை பல்லி கத்தும் சத்தத்தை வைத்து சகுனம் பார்க்கின்ற வழக்கம் இருந்தது என்ற தமிழர் நம்பிக்கை போன்றன எடுத்துக் காட்டி பாடப்பட்டுள்ளன.

மேலும், தமிழ் மன்னர்களின் கொடைச்சிறப்பு வரலாறு, ஆட்சி சிறப்பு வரலாறு, மன்னரை பின்பற்றும் மக்களின் அறவாழ்க்கை, குடிகளின் செழிப்பு, நாட்டு வளம் போன்றவற்றையும் இவ்விலக்கியங்கள் கூறுகின்றன.

குறுந்தொகை: குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களை இது கொண்டுள்ளமையால் “குறுந்தொகை” என்றழைக்கப்படுகிறது. இந்நூற்பாடல்களில் வர்ணனைகள் குறைவாகவும் உணர்வு மிகுதியாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

பொருத்தமான உவமைகள் கையாளப்பட்டுள்ளன. மனிதர்களின் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் இவ்விலக்கியம் சித்தரித்துள்ளது.

இந்நூலில் பாடப்பட்டுள்ள தமிழ் பேரரசர்களாக சோழன் கரிகால் வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன் போன்றோரும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்களும் காணப்படுகின்றனர்.

மேலும், தலைவனின் அன்பின் ஆழம், தலைவியின் காதல் நம்பிக்கை போன்றனவும் தமிழ் பாடல்கள் மூலம் எடுத்து இயம்பப்பட்டுள்ளன.

ஐங்குறுநூறு: இந்நூல் கடைச்சங்க காலத்திற்குரியதாகும். ஐந்து நிலங்கள் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்களை கொண்டு ஐந்நூறு அகத்திணை பாடல்களை கொண்டுள்ளது.

இதைப்பாடிய தமிழ் புலவர்கள் எவரென நோக்கின், ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்போர் ஆவார்.

இந்நூலுக்குறிய சிறப்பம்சத்தை நோக்கின், இவை வேட்கை பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து என சிறப்புத் தலைப்புப் பெயர்களைக் கொண்ட சொல்லாட்சியாலும், பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்று பத்துப் போன்ற பொருளமைப்பினாலும் பெயர் பெற்றமையைக் குறிப்பிடலாம்.

மேலும், இவை உள்ளுறை உவமை, இறைச்சிப் பொருள் முதலிய நயங்களை கொண்டு அமைந்துள்ளமை இவ்விலக்கியத்தின் சிறப்பம்சமாகும்.

பதிற்றுப்பத்து: இத்தமிழ் இலக்கியமானது சேர மன்னர்கள் பதினொருவர் பற்றி புலவர்களால் பத்துப்பத்தாக பாடப்பட்ட நூலாகும். இது கடைச்சங்க காலத்தை சேர்ந்தது.

தமிழ் மன்னர்களான உதியஞ்சேரல் வழி வந்த ஐந்து சேர மன்னர்கள் பற்றியும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழிவந்த மூன்று சேர மன்னர்கள் பற்றியும் வரலாறுகளை கூறுகின்ற இலக்கியம் பதிற்றுப்பத்து ஆகும்

இந்நூல் சேர மன்னர்கள் வலிமையை முற்றும் முழுதாக எடுத்து இயம்புகின்றது.

மேலும், இம்மன்னர்களின் படை வலிமை, குடியோம்பல் முறை, போர்த்திறம், பகையரசர் மீது காட்டும் பரிவு, கல்வித்திறம், கலைஞர்களை போற்றும் பண்பு, சூடிய வெற்றி வாகை, காதல் சிறப்பு, மனத்திடம், கொடைத்திறன் உட்பட மகளிரை மதிக்கும் மாண்பு என்பன பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளன.

இதைப்பாடிய புலவர்களாக கபிலர், பரணர் விளங்குகின்றனர்.

பரிபாடல்: தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை இந்நூல் இலக்கணமாக கொண்டுள்ளது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் நான்கு பாவகைகளை கொண்டமைந்தது.

இந்நூலில் திருமாலுக்கு எட்டு பாடல்கள், முருகனுக்கு முப்பத்தொறு பாடல்கள், காடுகள் காளியான கொற்றவைக்கு ஒரு பாடல், படிப்பதற்கு இனிமையாக உள்ள வையைக்கு இருபத்தாறு பாடல்கள், மதுரை நகருக்கு நான்கு பாடல்கள் என்றவாறு பாடப்பட்டுள்ளன.

இதிலிருந்து தமிழ்க் கடவுள்களை போற்றும் பண்புள்ள தமிழினம் அக்காலத்திலேயே இருந்துள்ளது என்ற கருத்தை முன்வைத்து தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) எத்தனை பழமையானது என்ற உண்மையை நாம் அறியலாம்.

கலித்தொகை: சங்க தமிழ் இலக்கியங்களில் ஆறாவது இடத்தை இந்நூல் பிடிக்கிறது. இது ஓசை இனிமை கொண்டமைந்துள்ளதோடு சிறப்பு பாவினங்களான தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்பவற்றால் அமைந்துள்ளது.

பண்டையத் தமிழர்களின் பழக்கவழக்கங்கள், ஒழுக்க விழுமியங்கள்,  மரபுகள், காலத்தின் தன்மை, நல்லோர் தீயோர் பண்புகள் மற்றும் மரம், செடி, கொடிகள் உட்பட விலங்குகள் பறவைகள் இயல்புகள் எடுத்து இயம்புகின்றன.

அகநாநூறு: சங்ககால அகத்திணை பண்பு சார்ந்த நூலாக இது திகழ்கிறது. இதற்கு நெடுந்தொகை என்று இன்னோரு பெயரும் உண்டு. இதில் அமைந்துள்ள பாடல்கள் ஆனது பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு தமிழ் புலவர்களினால் பாடப்பட்டுள்ளது.

இந்நூலை தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரபெருவழுதியார் ஆவார், தொகுத்த புலவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மர் ஆவார்.

இதிலிருந்து, புலவரும் மன்னரும் தமிழ் மீது கொண்ட பற்றையும் தமிழை வளர்த்தமையும் தெளிவாக அறியலாம்.

தமிழ் வரலாற்றுக்கு இது ஓர் இன்னோரன்ன சான்றாகும். மேலும், இவ்விலக்கியத்தில் பெரு நில மன்னர்களும் சிறு நில மன்னர்களும் பற்றிய ஏராளமான வரலாற்று செய்திகள் காணப்படுகின்றன.

புறநானூறு: இவ்விலக்கியம் ஓர் தொகை நூலாகும். நானூறு பாடல்களை கொண்டமைந்தது. தமிழ் புலவர்களான ஔவையார், கபிலர் உட்பட பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர்.

இவ்விலக்கியம் மூலம் அக்கால தமிழர்களின் அரசியல், வணிகம், சமூகநிலை, பொருளாதார நிலை, நாகரிக வளர்ச்சி, கல்விநிலை, கொடை, ஆடை அணிகலன்கள், வீரம், பழக்கவழக்கங்கள் போன்ற வரலாறுகளை அறியலாம்.

அத்துடன், பாண்டிய மன்னர்களான நெடுஞ்செழியன் முதலான பதினைந்து பாண்டிய மன்னர்கள் பற்றியும் கரிகாற்சோழன் உட்பட பதினெட்டு சோழ மன்னர்கள் பற்றியும் சேர மன்னர்களான இயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற பதினெட்டு சேர மன்னர்கள் பற்றியும் சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி பத்துப்பாட்டு நூல்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை: இந்நூலானது மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்ற தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூலாக கருதப்படுகிறது.

முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இது ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை எனும் ஆறுபடை வீடுகள் பற்றி பாடுவனவாக அமைந்துள்ளன.

பொருநராற்றுப்படை: இந்நூலானது சோழ மன்னனான கரிகால் வளவனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென நோக்கின் தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான ஏழடி சென்று வரவேற்றலும் மற்றும் வழியனுப்பலும் குறித்து பாடப்பட்டுள்ளது.

மேலும், கரிகால் வளவன் கொடை வழங்கி பசி போக்க வல்லவன், கடும் பசியிலிருக்கும் பொருநன் கரிகால் வளவனின் வாயிலை அடையின் துயர் நீங்கும் என மன்னன் புகழ் பாடுவதாக அமைந்துள்ளது.

சிறுபாணாற்றுப்படை: ஓய்மான் நாட்டு அரசரான நல்லியங்கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நத்தத்தனார் எனும் புலவர் பாடியுள்ளார்.

இதில் இம்மன்னனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒருவன் வழியிற் கண்ட இன்னொரு பாணனை மன்னனிடம் செல்ல வழிப்படுத்தும் விதமாக அமைகிறது.

இதிலிருந்து மன்னனின் கொடைத்திறம் சிறப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, சிறுபாணன் கூறுகையில் நல்லியங்கோடன் மன்னனின் நல்லியல்புகளுடன் நாட்டுவளம், செல்வசெழிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

இதன் மூலம், அன்றைய தமிழர் ஆட்சியானது எத்தனை வளம் மிகுந்து இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

பெரும்பாணாற்றுப்படை: இந்நூலானது தொண்டைமான் இளந்திரையன் என்ற சோழ மன்னன் பற்றியது. இதை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் ஆவார்.

இந்நூலில் இம்மன்னரது கொடைத்திறம் பற்றி சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

முல்லைப்பாட்டு: இது பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு நப்பூதனார் எனும் புலவரால் பாடப்பட்டது.

மன்னன் புகழ், திறம் போன்றன சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார் எனும் புலவரால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இவ்வுலகை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்நூலில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் வனப்பு, வளம் மற்றும் ஐவகை நிலங்கள் பற்றிய சிறப்பு என்பன பற்றி பாடப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் தூங்கா நகர் என மதுரை சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், இரவு பகலாய் மக்கள் அங்காடிகளில் பொருட்களை விற்பதும் வாங்குவதுமாய் இருந்துள்ளனர். வெளியூர் வணிகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இக்கூற்றிலிருந்து அன்றைய தமிழ் வரலாறானது எத்தனை சிறப்பாக இருந்துள்ளது என்ற விடயம் தெரிய வருகிறது.

நெடுநல்வாடை: இந்நூலும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியன்நெடுஞ்செழியனைப் பற்றியதாகும். இயற்றியவர் மதுரையை வசிப்பிடமாகக் கொண்ட நக்கீரர் ஆவார்.

இதில் தலைவனை பிரிந்து வாடும் தலைவித்துயரும் போரில் வெற்றி கண்ட தலைவன் களிப்பும் பற்றி கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாட்டு: இது கபிலரால் பாடப்பட்டது. ஆரிய அரசரான பிரகத்தனுக்கு தமிழின் பெருமை உணர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பட்டினப்பாலை: இதில் கரிகாலனுடைய வீர தீரச் செயல்கள், பண்டைச்சோழ நாட்டின் சிறப்பம்சங்கள், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, செல்வ செழிப்பு, வளம், தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் என்பனவற்றைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர் கடல் வழியாக படகுகளை செலுத்தி வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கி  தமிழகத்திற்கு புகழை கொணர்ந்தார்.

இந்நூலை பாடியவர் கடியலூர் உருத்திரன் கண்ணனார் ஆவார். இவருக்கு தமிழ் பற்றுடையவரான கரிகாலன் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தார்.

இதிலிருந்து மன்னனின் தமிழ் ஆர்வமும், தமிழையும் தமிழ் புலவர்களையும் எத்திறம் ஆதரித்துள்ளார் என்ற வரலாறும் தெரிய வருகிறது.

மலைபடுகடாம்: இந்நூலை இயற்றியவர் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலானது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.

இது நவிர மலைத் தலைவனான நன்னன் என்பவனை பாட்டுடைத் தலைவனாக கூறுகிறது.

அவனது கொடைத்திறம், நவிர மக்களது வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள் பற்றியும் எடுத்தியம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விடயங்கள் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தமிழ் வரலாறானது வரையறையற்ற பெருமைகளையும் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம்.

ஏனெனில், முன்கூறியவற்றை வைத்து நோக்கும் போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் புலவர்கள் அனைவரும் தமிழை ஆதரித்து அரவணைத்து வளர்த்துள்ளனர் என்றால் பொய்யில்லை.

இதனடிப்படையில், தமிழ் வரலாறானது பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

சங்கமருவிய கால தமிழ் வரலாறு

History of Tamil Language in Tamil
History of Tamil Language in Tamil

அறநெறிக்காலம் என சங்கமருவிய காலத்தை குறிப்பிடுவர். ஏனெனில், இதற்கு முந்தைய காலமான சங்க காலத்தில் இயற்கை நெறியில் வாழ்ந்தோர் முறையற்ற, அறமற்ற வாழ்வை வாழ்ந்து மக்கள் சமுதாயமே சீரழிந்தமை என்று காரணம் சூட்டப்படுகிறது.

எது எவ்வாறாயினும், தமிழ் வரலாறு (Tamil History in Tamil) மற்றும் வளர்ச்சியை நாம் ஆராயும் போது சங்கமருவிய காலத்தில் களப்பிரர் ஆட்சி சற்று ஓங்கியிருந்தமையால் தமிழ் வளர்ச்சியானது சிறிது சரிவை நோக்கி நகரத் தொடங்கிற்று.

ஆயினும், அக்கால புலவர்கள் முழுமையாக மூழ்க விடாமல் இலக்கியங்கள் வாயிலாக தமிழை தலைத்தோங்கச் செய்துள்ளனர் என்றால் மிகையில்லை.

சங்ககாலத்தை பொறுத்தவரையில் இலக்கியங்களானது தமிழ் மக்களின் மற்றும் மன்னர்களின் போர், வீரம், காதல், பழக்கவழக்கங்கள் போன்றவற்றையே எடுத்தியம்பிற்று.

எனினும். சங்கமருவிய காலமானது அறநெறிக் கருத்துக்களையே கூறும் இலக்கியங்களையே தோற்றுவித்துள்ளது எனலாம்.

இவ்வாறு தமிழில் அறக்கருத்துக்களை கூறிய சங்கமருவிய கால இலக்கியங்களை இனி நாம் விரிவாக பார்ப்போம்.

இலக்கியங்கள்

இவ்விலக்கியங்களை  பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ் மற்றும் சமண முனிவர், புலவர்களால் பாடப்பட்டது.

நாலடியார்: இது ஓர் தமிழ் நீதி நூல் ஆகும். இந்நூல் சமண முனிவர்கள் நானூறு பேரால் பாடப்பட்டது என்பர்.

இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களை பற்றி கூறுகிறது. இவை மக்களது வாழ்வை சீர்செய்து செம்மை படுத்துவனாக இருக்கின்றன.

நான்மணிக்கடிகை: இந்நூல் விளம்பி நாகனார் எனும் புலவரால் பாடப்பட்டது. இது வெண்பாவினால் பாடப்பட்டுள்ளது.

அக்கால தமிழரின் வாழ்க்கைக்கு தேவையான பொய்யாமை, கொல்லாமை, புலாலுண்ணாமை போன்ற அறக்கருத்துக்களும் அன்றாட வாழ்வுக்கு தேவையான அறக்கருத்துக்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

இன்னா நாற்பது: இது கபிலர் எனும் புலவரால் இயற்றப்பட்டது. இது இவ்வுலகில் தகாதவை எவையென விளக்கி நீதி புகட்டும் தமிழ் நீதி நூலாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இனியவை நாற்பது: பூதஞ்சேந்தனார் எனும் புலவரால் இந்நூல் இயற்றியருளப்பட்டது. பண்டைக்கால தமிழ் நூல் பட்டியலில் இதுவும் ஒன்று.

இவ்வுலகில் நன்மையான அல்லது இனிமையான விடயங்களை எடுத்துரைத்து மக்களை நல்வழி படுத்தும் நூலாக விளங்குகிறது.

களவழி நாற்பது: இதை எழுதிய புலவர் பொய்கையார் என்பவராவார். இந்நூலில் தமிழ் மன்னர்களான கோச்செங்கணான் சோழனுக்கும் சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும் இடையில் கழுமலத்தில் நிகழ்ந்த போர்ப் பின்னணி பற்றி கூறப்பட்டுள்ளது.

இதில் உள்ள பாடல்களில் போர்க்களத்தின் காட்சியமைப்புக்களையும், போர் புரிந்து வெற்றி கண்ட சோழனும் அவனது படைகளும் பற்றி நயத்துடன் பாடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, அக்கால தமிழ் மன்னன் மற்றும் படைகளின் வீரதீர செயல் அளப்பரியது எனும் தமிழ் வரலாறு (Tamil History in Tamil) தெள்ளத் தெளிவாக காட்டப்படுகிறது.

கார்நாற்பது: இந்நூலில் பண்டைத் தமிழர்களின் அகம் சார்ந்த அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.  தலைவன் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் மனநிலை கார்காலப் பின்னணியில் கூறப்பட்டுள்ளது.

இதை மதுரையை சேர்ந்தவரான கண்ணங் கூத்தனார் இயற்றியுள்ளார். இதுவும் தமிழ் இலக்கியத் தொகுப்பில் ஒன்றாகும்.

தமிழர் சடங்குகளில் ஒன்றான கார்த்திகை விளக்கு திருவிழாவில் மக்கள் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைத்திருத்தல் காட்சி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இதிலுருந்து, பண்டையத் தமிழர்களிடையே திருவிழா செய்யும் வழக்கம், விளக்கேற்றும் பழக்கம் இருந்துள்ளது என்ற தமிழ் வரலாறு (Tamil History in Tamil) தெரிய வருகின்றது.

ஐந்திணை  ஐம்பது: அகப்பொருள்களை பற்றி பாடும் நூல்களில் இதுவும் ஒன்றாகும். இதை இயற்றியவர் மாறன் பொறையனார் என்ற புலவராவார்.

ஐவகை நிலங்களையும் ஐந்து திணைகளாக வகுப்பது பண்டைத் தமிழர்களின் வரலாறு (Tamil History in Tamil) ஆகும்.

அக்கால மக்களின் மனநிலைகளுக்கு பொருத்தமான முறையில் கருப்பொருளின் தன்மைகள் உருவாக்கப்பட்டு இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது.

திணைமொழி ஐம்பது: இது கண்ணன் சேந்தனார் எனும் புலவர் பாடிய இலக்கியம் ஆகும். அகம் சார்ந்த பாடல்களைக் கொண்டுள்ளது.

ஐந்து நிலங்களையும் திணைகளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. தமிழரின் வாழ்க்கை முறை அழகாகப் பாடப்பட்டுள்ளது.

ஐந்திணை எழுபது: சங்கமருவிய கால அகம் சார்ந்த இலக்கியங்களில் இதுவும் ஒன்றாகும். இதனை மூவாதியார் என்ற புலவர் இயற்றியுள்ளார்.

ஐந்து நிலங்கள் திணைகளாக பகுக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது. காதல் மலர்ந்த இரு உள்ளங்களின் உள்ளுணர்வுகள், அக்கால சமூக வாழ்க்கை அமைப்பு, பண்பாடுகள் என்ற பின்னணியில் பாடப்பட்டுள்ளன.

மேலும், இந்நூலின் தொடக்கத்தில் விநாயகர் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று காணப்படுகிறது.

இதிலிருந்து, பண்டையத் தமிழர்களிடம் ஒரு காரியத்தை தொடங்கும் முன் விநாயகரை வழிபடும் வழக்கம் இருந்துள்ளமை தமிழ் வரலாற்றில் முக்கியமான சான்றாகும்.

திணைமாலை நூற்றைம்பது: கணிமேதாவியார் எனும் புலவர் இவ்விலக்கியத்தை இயற்றியுள்ளார். இதுவும் அகம் சார்ந்த பாடல்களை உள்ளடக்கிய ஓர் தமிழ் நூலாகும்.

திருக்குறள்: இது தமிழ் மொழியின் பழமையான அறநூலாகும். திருவள்ளுவர் இயற்றியுள்ளார். அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருள்களை பற்றிக் கூறுகிறது.

இது ஓர் வாழ்வியல் நூலாகும். சங்ககால தமிழ் மக்களின் குற்றங்குறைகளை மறுத்து வலியுறுத்தி அவர்களது பண்பாட்டு பழக்கவழக்கங்களை திருத்தி சீரழிந்த வாழ்வியலை மாற்றி தமிழ் கலாசாரத்தினை நிலையாக வகுத்த நூலாக இது திகழ்கிறது.

தமிழ் இலக்கிய நூல்களிலேயே மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது சிறப்பிக்கப்படுகிறது. நாற்பதுக்கு மேற்ப்பட்ட இந்திய மற்றும் அண்டை நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைத் தமிழ் நூல் இதுவே ஆகும்.

இவ்விடயம் தமிழ் வரலாற்றிலேயே சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஓர் அம்சமாகும்.

மேலும், தமிழகத்தில் குறளை பற்றிய செப்பேடுகள், கல்வெட்டுக்கள், மேலோலைகள் போன்ற வரலாற்று ஆவணங்கள் பல கிடைத்துள்ளன.

எடுத்துக்காட்டாக, சேல மாவட்ட பொன்சொரி மலையிலுள்ள கல்வெட்டில் “புலால் மறுத்தல்” அதிகாரத்திற்குரிய குறள் காணப்படுகிறது.

இவ்வாறு பல செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளமை தமிழ் வரலாற்றில் முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன.

திரிகடுகம்: இது நல்லாதனார் எனும் புலவரால் இயற்றப்பட்டது. இதில் மக்களது அறியாமை என்ற பிணியை போக்கி வாழ்க்கையை வளப்படுத்தும் மூன்று நீதிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

ஆசாரக்கோவை: இது பெருவாயின் முள்ளியார் எனும் புலவரால் எழுதப்பட்டது.

மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை கூறும் தமிழ் இலக்கியமாக இது திகழ்கிறது. இது ஓர் தமிழ் நீதி நூல் ஆகும்.

பழமொழி நாநூறு: இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் எனப்படும் சமணரால் இயற்றப்பட்டதாம்.

இதில் செம்பியன் மன்னன், மனுநீதி கண்ட சோழன், பொற்கை பாண்டியன், கரிகால சோழன், சேரன் செங்குட்டுவன், பாரி, பேகன் போன்ற பெருநில மற்றும் குரு நில மன்னர்கள் வரலாற்று செய்திகளும் காணப்படுகின்றன.

சிறுபஞ்சமூலம்: காரியாசான் எனும் புலவர் இயற்றியுள்ளார். இது நீதி புகட்டும் நூலாக காணப்படுகிறது. பண்டைத் தமிழர் வாழ்வியலை நல்வழிப்படுத்த எழுந்த தமிழ் இலக்கியமாக கருதப்படுகிறது.

முதுமொழிக்காஞ்சி: மதுரை கூடலூர்க்கிழார் இந்நூலை இயற்றியுள்ளார். நிலையாமையை எடுத்துரைத்து உலகியல் அனுபவத்தை எடுத்துணர்த்துகிறது. தமிழ் நூற்தொகுதியில் மிகச் சிறியது இதுவென கொள்ளப்படுகிறது.

ஏலாதி: பண்டைத் தமிழ் நீதி நூல்களில் இதுவும் ஒன்று. சமணரான கணிமேதாவியார் இதை எழுதினார். மக்கள் ஒழுக்க குறைவுக்கு மருந்தாக இந்நீதி நூல் அமைகிறது.

கைந்நிலை: இந்நூலை இயற்றியவர் புல்லங்காடனார் ஆவார். தமிழரின் ஐந்து நிலத்திணைகளை பின்னணியாக கொண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

தமிழரின் ஒழுக்க நிலையை திணை வாரியாக கூறுவதால் கை என்றால் ஒழுக்கம், நிலை என்றால் தன்மை எனக் கொண்டு இந்நூலுக்கு கைந்நிலை என பெயர் சூட்டியுள்ளனர்.

இவ்வாறு எழுந்த அறநூல்களை ஆதாரமாகக் கொண்டு அன்றைய தமிழ் சமூகமானது நீதி நெறிகளுக்கு கட்டுப்படக் கூடியவர்களாகவும் ஏற்று நடக்க கூடியவர்களாகவும் இருந்துள்ளனர் என முன்வைக்கலாம்.

ஆக மொத்தத்தில் சங்கமருவியகால இவ்விலக்கியங்கள் தமிழ் வரலாற்று நீதி நெறிகளை வகுத்து உள்ளது  என்ற உண்மையை கூறுகிறது எனலாம்.

பல்லவர் கால தமிழ் வரலாறு

பல்லவர் காலத்தை நோக்கின் பக்தி நெறிக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாக திகழ்கிறது. எனினும், தமிழ் அற்றுபோகவில்லை. தமிழிலும் பக்தி பரப்பப்பட்டது.

சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் ஊடாக தத்தம் சமயம் பரப்பப்பட்டது. மக்களிடையே அவர் அவர்களின் பக்தி நெறிகளை கொண்டு சமயங்களை பரப்பினர்.

இதனுடன், இணைந்து தமிழும் வளர்ச்சி பெறலாயிற்று. மக்களிடையே அவர்களின் பக்தி இயக்கம் பரவுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் இசையோடு அமைந்த தமிழ் பாடல்கள் துணை புரிந்தன.

இடைக்கால தமிழ் வரலாற்றில் முதல் காலப்பகுதியாக விளங்குவது பல்லவர் காலம் ஆகும்.

இக்கால தமிழ் வரலாற்றை அறிவதற்கு இலக்கியங்கள், சாசனங்கள். செப்பேடுகள், கல்வெட்டுகள் துணை செய்கின்றன.

தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஏராளமான இலக்கியங்கள் தோற்றம் பெற்ற காலமாக பல்லவர் காலம் திகழ்கிறது.

நாயன்மார்கள் பாடிய தேவாரங்கள், மாணிக்கவாசகரது திருவாசகம், திருக்கோவையார் என்பன தமிழ் மொழிக்கு கிடைத்த களஞ்சியமாக கொள்ளப்படுகிறது.

பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட பாடல்கள் யாவும் இக்காலத்தில் பாடப்பட்டவை ஆகும்.

இவை சைவத்தை மட்டுமல்லாது தமிழையும் வளர்க்க பெரும் பங்காற்றியுள்ளன எனலாம்.

மேலும், பல்லவர் காலத்தில் தோற்றம் பெற்ற கல்வெட்டுக்கள் யாவும் தமிழ் மொழியில் காணப்பட்டுள்ளன. ஆதிபல்லவ சாசனத்தில் தமிழும் பிராமியும் கலந்த கிரந்த எழுத்துக்கள் காணப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழின் வளர்ச்சியையும் பேச்சு மொழியின் சாயலையும் தெளிவாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன.

கல்வெட்டுக்கள் மட்டுமன்றி வேள்விக்குடி சாசனம், பாகூர்ச்செப்பேடு, சின்னமன்னூர் செப்பேடு போன்றன தமிழ் மொழி அமைப்பை காட்டும் சான்றுகளாக திகழ்கின்றன.

ஆகவே, இதனடிப்படையில் நோக்கும் போது தமிழ் வரலாற்றை பறை சாற்ற பல்லவர் காலம் இன்னோரன்ன சான்றாதாரமாக திகழ்கின்றது எனலாம்.

சோழர்கால தமிழ் வரலாறு

History of Tamil Language in Tamil
History of Tamil Language in Tamil

காலங்களில் சோழர்காலம் ஒரு பொற்காலமாக திகழ்ந்தது. கட்டிடக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, ஓவியக்கலை, அரசியல் என அனைத்திலும் சிறந்து விளங்கிய காலமாக மிளிர்ந்தது.

மேலும், சோழர் காலத்தில் தமிழ் சிறப்பிடம் பெற்று இருந்தது. அரசியல், நிர்வாகம், சமயம், இலக்கியம், வணிகம் என அனைத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட்டது.

சோழர்களின் பட்டயங்கள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் என பலவும் தமிழிலேயே அமைந்திருந்தன. தமிழ் இலக்கியங்களிற்கு சிறந்ததொரு காலமாக திகழ்ந்து தமிழிலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது.

இராஜராஜ சோழன் காலத்தில் தேவாரங்கள் திருமுறைகளாக தொகுக்கப்பட்டன. திருத்தக்க தேவரால் சீவகசிந்தாமணியும் தோலாமொழித்தேவரால் சூளாமணியும் அருளப்பட்டது.

இதைவிட முக்கியமான விடயம் என்னவெனில் மூன்றாம் குலோதுங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் இராமாயணத்தை எழுதினார்.

தமிழ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த இலக்கியமாக இது கருதப்படுவது எடுத்து நோக்கத்தக்கது.

இராமாயணமானது தமிழர் பண்பாட்டு கலாசாரத்திற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது.

மேலும், கலிங்கத்துப் பரணி, குலோதுங்க சோழ உலா, தக்கயாக பரணி, மூவருலா, பெரியபுராணம், சைவ சித்தாந்த நூல்கள் என்பன இக்காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உயரத்தில் கொண்டு சென்றன.

இவ்வாறு சோழர் காலமும் தமிழ் வரலாற்றை வளர்ச்சியடைய செய்ய உறுதுணையாக விளங்கிற்று என்றால் எவ்வித மறுப்பும் இல்லை.

சிந்துவெளிக்கால தமிழ் வரலாறு

வட இந்தியாவில் சிந்து நதிக்கரையை அண்டிய பகுதிகளில் நிலவிய நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் எனப்படும்.

மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்திய போது பல்வேறு உண்மைகளை கண்டு வியக்க கூடியதாக இருந்தது.

தமிழ் வரலாறு (Tamil History in Tamil) ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ஒன்றாக இது தெரிய வந்துள்ளது. தமிழர்களின் முன்னோர்கள் அப்பகுதியிலேயே வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன.

பல்லாயிர வருடங்களுக்கு முன் இத்தமிழர் நாகரிகம் மண்மேடு இட்டு புதைந்து போயிற்று.

அகழ்வின் போது பழங்கால தமிழ் எழுத்துக்களானது சீனர்கள் போல சித்திர எழுத்துக்களாக காணப்பட்டுள்ளனவாம். இவ்வாறு சித்திர எழுத்துக்கள் எழுதி வந்த காலம் மிகவும் பழமையானது என கருதப்படுகிறது.

இதை வைத்து நோக்கும் போது தமிழர் மற்றும் தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) மிகத் தொன்மையானது என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்தப்படுகிறது.

பண்டைத் தமிழ் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள்

History of Tamil Language in Tamil
History of Tamil Language in Tamil

இந்திய தொல்லியல் ஆய்வகம் கண்டுபிடித்துள்ள பண்டைய கல்வெட்டுக்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்டவை.

இதில் சுமார் அறுபது ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழி கல்வெட்டுக்களாகும்.

இதிலிருந்து தமிழ் வரலாறானது (Tamil History in Tamil) எத்தனை பழமை வாய்ந்தது என்பது தெரிய வருகிறது.

தமிழ் நாட்டின் பழனி, ஈரோடு, ஆதிச்ச நல்லூர் என்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தமிழ் நாட்டின் ஜம்பை கிராமத்தில் கி.மு 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் தமிழ் எழுத்து கொண்ட கல் படுக்கைகள் காணப்படுகின்றன.

ஆதிச்சநல்லூர் புதைப்பொருட்களில் பெருங்கற்கால் குறியீடுகளுடன் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன.

கீழடி அகழ்வு மையத்தில் கிடைக்கப் பெற்ற தமிழ் கல்வெட்டுக்களில் பல தமிழ் பெயர்கள் காணப்பட்டன.

மதுரை மாவட்டத்தின் மாங்குளத்தில் தமிழ் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போது தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) என்பது மிகத் தொன்மை வாய்ந்தது.

 தோன்றிய காலம் இது தான் என வரையறை கூற முடியாத அளவுக்கு பழமையும் புதுமையும் வாய்ந்தது தமிழ் வரலாறு.

முடிவுரை – History of Tamil Language in Tamil

ஆதி இதுதான் என கூற முடியாத பழமைத்துவம் வாய்ந்த தமிழ் வரலாறானது பெருமிதம் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்குகிறது. தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

ஏனெனில், எம்மொழிக்கும் இல்லாத அத்தனை சிறப்புக்களையும் பெருமைகளையும் கொண்ட ஒரேயொரு வரலாறு நம் தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) என்றால் பொய்யில்லை.

தமிழ் வரலாற்றைக் கூற வார்த்தைகள் போதாது எனலாம். சொல்ல சொல்ல குறையாத கேட்க கேட்க திகட்டாத தன்மையை உண்டாக்கும் வல்லமை நம் தமிழ் வரலாற்றுக்கே (Tamil History in Tamil) உண்டு என எவ்வித ஐயமும் இன்றி கூறலாம்.

ஆகவே, உலகமே போற்றும் தமிழ் வரலாற்றை இன்றும் என்றும் போற்றி புகழ்ந்து ஓங்கச் செய்வோம்.

தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language in Tamil) என்ற இப்பதிவு மூலம் நீங்கள் பல விடயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறான பயனுள்ள தகவல்களை வாசிக்க நமது வலைத்தளத்தை அடிக்கடி பின்தொடருங்கள்.

மேலும், இவ்வாறான பதிவுகளை உடனே அறிந்துகொள்ள எமது சமூக வலைத்தளங்களை (Facebook, X, Instagram, YouTube) Follow பண்ணுங்கள்.

ஆறுமுக நாவலர் வரலாறு
சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top