ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாக விளங்கும் இந்து மதமானது சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. எம்மதத்திற்கும் இல்லா அருமைபெருமைகளை தன்னகத்தே உடைய ஒரே மதம் இந்து மதம் என்றால் மிகையில்லை.
இனி இந்து மத வரலாறு (Hindu Religion History in Tamil) பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்து சமயத்தின் தோற்றம்
வேத காலம்
வேதகாலத்திலேயே இந்து சமயம் அல்லது இந்து மதம் தோற்றம் பெற்றது எனலாம். ஆயினும், அக்காலத்தில் ஒரு மதமாகவோ ஒரு சமயமாகவோ இல்லாமல் தன்னைவிட உயர்ந்த சக்தி ஏதோ ஒன்று உள்ளது என்று, அதை தெய்வமாக கொண்டு வழிபடலாயினர்.
வேதகால மக்கள் இயற்கைக்கு அஞ்சியவர்களாக இருந்துள்ளனர். இதனால் இடி, மின்னல், மழை, புயல் போன்ற இயற்கை அம்சங்களை உயர்ந்த சக்தியாகக் கொண்டு அவற்றை கடவுளாக வணங்கி வந்துள்ளனர்.
இயற்கை சக்திகளை வெல்லவோ விளக்கவோ முடியாது என்ற நிலையில் வேதகால மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வாறு இயற்கை மீது கொண்ட பயம் காரணமாக கடவுள் வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவாக வேதகாலத்திற்கென ஒரு கடவுட்கோட்பாடும் உதயமாயிற்று.
வேத கால மக்கள் தோற்றுவித்த கடவுள் கோட்பாடுகள் மூன்று வகையாக நோக்கப்படுகின்றன. அவை முற்கால கடவுள் கோட்பாடு, இடைக்கால கடவுள் கோட்பாடு மற்றும் பிற்கால கடவுள் கோட்பாடு என்பனவாகும்.
அதோடு, இயற்கை சக்திகளுக்கு இறைவன் அந்தஸ்தை கொடுத்து அவற்றுக்கு பல்வேறு பெயர்களை சூட்டியும் வணங்கலாயினான். இதனடிப்படையில், இருக்கு வேதத்தில் முப்பத்து மூன்று கடவுள்கள் வணங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.
மேலும், இத்தெய்வங்களை விண்ணுறை தெய்வங்கள், மண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என மூன்றாக பகுத்திருந்தனர். இப்பகுப்பிற்குள் விஸ்னு, இந்திரன், வருணன், அக்கினி ஆகிய தெய்வங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்விருக்கு வேதத்தில் பல தெய்வங்கள் வணங்கப்பட்டமையும், மக்களது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தெய்வம் வணங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் மேலான தெய்வமாக கருதப்பட்டது. இதனடிப்படையில், இடைப்பட்ட வேத காலத்தில் தேவைகளிற்கு ஏற்ப தெய்வங்களை முதன்மை படுத்தி வழிபடும் ஒரு தெய்வக் கோட்பாடு தோன்றலாயிற்று.
மேலும், எல்லாவற்றிற்கும் மேலானது உயர்ந்ததுமான ஒருவர் இருக்கிறார், அவரே பிரஜாபதி, அவருக்கே உங்கள் அவி பாகங்களை சொரியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கினி தீ வளர்த்து அதில் நெய், பால் போன்ற அவி பாகங்கள் போடப்பட்டு பிரஜாபதி வழிபடப்பட்டார்.
இதை வைத்து நோக்கும் போது இன்றைய காலத்தில் இந்து சமய பூஜைகளின் போது யாகம், வேள்வி, ஹோமம் போன்றன நிகழ்த்தப்பட்டு அதில் வளர்க்கப்படும் அக்கினியில் நெய், அவல் பொறி, பால், அரிசி பொறி, தேன் போன்றன போடப்படும் வழக்கத்திற்கு வேத காலமே ஆணி வேராய் இருந்துள்ளது என்றால் மிகையில்லை.
வேத காலத்தை வைத்து ஒட்டுமொத்தமாக நோக்கும் போது அக்கால பல தெய்வ மற்றும் ஒரு தெய்வ வழிபாடு, யாக வேள்வி வளர்ப்பு, அக்கினியில் அவி சொரிதல் போன்ற சமய சடங்கு சம்பிரதாய அம்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து இன்றைய சமய சடங்குகளில் அங்கம் வகித்துள்ளன என ஐயமின்றி கூறலாம்.
அதாவது, வேதகால பண்பாட்டிலேயே இந்து சமயம் தோற்றம் பெற்றுள்ளது என நம்பிக்கையுடன் கூறலாம்.
அடுத்ததாக நாம் சிந்துவெளிக் காலத்தை ஆதாரமாகக் கொண்டு இந்து சமய வளர்ச்சியை ஆரய்வோம்.
சிந்துவெளிக் காலம்
சமய நம்பிக்கைகள், வழிபடப்பட்ட தெய்வங்கள், வழிபடப்பட்ட சடங்கு முறைகள், வழிபாட்டு அம்சங்கள் போன்றன சமயநிலை எனப்படுகிறது.
இதனடிப்படையில், ஆராயும் போது இன்றைய இந்து சமய வளர்ச்சிக்கு சிந்துவெளிக்காலமானது அளப்பரிய துணை செய்துள்ளது என ஆணித்தனமாக கூறலாம். ஏனெனில், சிந்துவெளிக்கால சமய நிலையும் இன்றைய சமய நிலையும் முற்றும் முழுதாக ஒத்துப்போகின்றமையால் ஆகும்.
இன்று நாம் சிவன், பார்வதி, லிங்கம், காளி, சூலம், நாகம், பறவை, சூரியன், விருட்சம், அக்கினி, தேவதைகள் போன்ற பல தெய்வங்களை வழிபடுவது போல சிந்துவெளியிலும் இவ்வழிபாட்டு முறைகள் இருந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
மேலும், சிந்துவெளி அகழ்வாராச்சியின் போது ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிள்ளன. இவையனைத்தும் இந்து சமய வழிபாட்டின், சமய நம்பிக்கையின், சமய பழக்கவழக்கத்தின் தொடக்கம் இதுவென பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளன எனலாம்.
சிந்துவெளியில் சுட்ட களி மண்ணிலான உருவ பொம்மைகள் பல கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பெண்பாவை போன்ற உருக்கள் பல கிடைத்துள்ளன.
இவ்வுருக்களின் தோற்றங்களை வைத்து சாந்தமான முகங் கொண்ட உருக்கள், கோர முகங்கொண்ட உருக்கள் என ஆய்வாளர்கள் இரண்டாக பிரித்துள்ளனர். பார்வதி, இலக்குமி, கௌரி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களை சாந்த முகங்கொண்டவர்களாகவும் இன்று நாம் வழிபடுகிறோம்.
அதே போல காளி, துர்க்கை, நீலி, சூலி போன்ற கோர முகம் கொண்ட தெய்வங்களையும் வழிபடுகின்றோம்.
ஆகவே, இப்பெண்பாவை பொம்மைகளை வைத்து சாந்த மற்றும் கோர முகங்கொண்ட தெய்வ வழிபாட்டிற்கு வித்திட்ட காலமே சிந்துவெளி எனக்கூறி அக்கால வழிப்பாட்டு முறையே வளர்ச்சி அடைந்து இன்று பெண் தெய்வ வழிபாடாக அமைந்துள்ளது எனலாம்.
அத்துடன், குழந்தையை கையிலேந்தி இருப்பது போன்ற பெண்ணுருவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் வளர்ச்சியே இன்றைய சோமஸ்கந்த வழிபாடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஓர் உருவச்சிலையானது, ஒரு மாமரத்தின் மீது இரண்டு கொம்புகள் உடையதும், தலைவிரி தோற்றத்துடனும், பெண் ஒருவர் நிற்பது போல் அமைந்து கீழே இன்னொரு பெண் மண்டியிட்டு இருப்பது போலவும், அவளருகே குட்டைப் பாவாடை அணிந்து ஏழு பெண்கள் நிற்பது போன்றதுமான தோற்றப்படுடன் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வுருவம் விளக்குவது இன்று காணப்படும் வனதேவதை வழிபாடாக இருக்கலாம் எனவும், இதற்கான ஆதி விதையே சிந்துவெளி எனவும் கூறப்படுகிறது.
ஆகவே, தற்கால வனதேவதை வழிப்பாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமே சிந்துவெளி என ஐயமின்றி கூறலாம்.
சிந்துவெளியில் கிடைக்கப்பெற்ற இலட்சினை ஒன்றில் கருவுற்ற பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து செடி ஒன்று வெளிவருவது போன்று பொறிக்கப்பட்டிருந்தது.
இது பூமாதேவியை வழிபடும் வழக்கம் இருந்துள்ளமைக்கு சான்றாக கூறப்படுகிறது. அதாவது, பூமியை பெண் தெய்வமாக வழிபடும் பழக்கத்தின் தொடக்கப் புள்ளி சிந்துவெளி என்கின்றனர்.
ஆகவே, இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பாவை உருக்களை கொண்டு இன்றைய பெண் தெய்வ வழிபாட்டிற்கு ஆணி வேராகவும் அடித்தளமாகவும் இருப்பது சிந்துவெளிக் காலமே எனலாம்.
இந்து மத வரலாறு (Hindu Religion History in Tamil) பற்றி நோக்கும் பொழுது சிந்துவெளியானது ஒரு மைல் கல்லாக விளங்குகிறது என கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு நிரூபிக்கலாம்.
இன்று ஆலயங்களில் பிரம்மா, விஸ்னு, உருத்திரன் போன்ற மும்மூர்த்திகளின் வழிபாடு காணப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் ஆரம்பமே சிந்துவெளியாக இருக்கிறது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட உருவச்சிலை ஒன்றில், ஒரு முகத்தின் இரு புறமும் இரு புடைப்புகள் காணப்படுகின்றன. இது மும்மூர்த்திகளின் தோற்றமே எனக்கூறி அக்காலத்தில் மும்மூர்த்தி வழிபாடு இருந்துள்ளது என்கின்றனர்.
இங்கு பல யோகி உருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை யோகிகளுக்கெல்லாம் தலைவன் என்ற சிவனின் யோகீஸ்வரர் வழிபாட்டை குறிக்கின்றது.
யோகியை சூழ்ந்து சிங்கம், கரடி, புலி, யானை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன. இது உயிர்களுக்கெல்லாம் தலைவன் என்ற பசுபதி என்ற பெயரை விளக்குவனவாக அமைகின்றது என்கின்றனர்.
இதனைக் கொண்டு சிவனுக்கு பல நாமங்கள் கொடுத்தும் பல உருவங்கள் கொடுத்தும் வழிபடும் இன்றைய போக்கின் அடித்தளம் சிந்துவெளியே எனக் கூறுகின்றனர். இக்கருத்தில் எவ்வித மறுப்பும் இல்லை.
இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இலட்சினை ஒன்றில் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூங்கொத்து ஒன்று இருப்பது போல காட்சி அளிக்கிறது. இது திரிசூல வழிபாடாக இருக்கலாம் எனக்கூறி இன்றைய சூல வழிபாட்டின் தொடக்கம் இதுவென நம்பப்படுகிறது.
அத்துடன், காலைத்தூக்கி ஆடுகின்ற உருவம் கொண்ட வெண்கல சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நடராஜப்பெருமானின் தில்லை கூத்தை நினைவு கூறும் விதமாக இருக்கிறது.
ஆகவே, அன்றைய காலத்தில் நடரஜப்பெருமான் வழிபாடும் இருந்துள்ளமைக்கு சான்றாக இவ்விடயம் அமைந்துள்ளது.
மேலும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் முக்கியமானவையாக அளவில் பெரியதும் சிறியதுமான இலிங்க வடிவ கற்கள் காணப்படுகின்றன. இவை அன்று இலிங்க வழிபாடு இருந்தமைக்கு ஆதாரமாக விளங்குகிறது.
சிறிய இலிங்கங்களில் சிறு துளைகள் காணப்பட்டுள்ளன. அதனால், இவ்விலிங்கங்களை மக்கள் தாயத்துக்களாக அணிந்து வந்துள்ளனர் என நம்பப்படுகிறது.
அத்துடன், பெரிய இலிங்கங்களை மூலஸ்தானத்தில் வைத்து வழிபடும் வழக்கமும் இருந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நந்தி வழிபாடும் சிந்துவெளியில் இருந்துள்ளது. இதற்கு சான்றாக இலட்சினை ஒன்றில் யோகி ஒருவரின் முன் காளை மாடு ஒன்று இருப்பது போல காணப்பட்டுள்ளது. இதுவே, நந்தி வழிபாட்டின் தோற்றம் ஆகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்னொரு இலட்சினையில் முக்காலி ஒன்றின் மேல் பாற்கிண்ணம் ஒன்றும், அதன் முன் படமெடுக்கும் நாகம் ஒன்றும் காணப்படுவதாக அமைந்துள்ளது.
இது நாக வழிபாடு சிந்துவெளியில் ஆரம்பிக்கப்பட்டது; அதன் வளர்ச்சிப்பாதையே இன்றைய காலத்தில் காணப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சான்றாதாரங்களை வைத்து நோக்கும் போது சிவ வழிபாடு, பெண்தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, நாக வழிபாடு, மர வழிபாடு, நந்தி வழிபாடு மற்றும் பல தெய்வ வழிபாடு போன்றன எல்லாம் இன்றைய இந்து சமயத்தில் காணப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக சிந்துவெளி காலமே இருந்துள்ளது என உறுதியாக கூறலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்கும் போது இந்து மத வரலாறு (Hindu Religion History in Tamil) என்பது பல்லாயிர வருடங்கள் பழமையும் பெருமையும் கொண்டது.
இன்றைய சமய வழிபாட்டு முறைகளானது சிந்துவெளிக்கால மக்களின் வழிபாட்டு முறையை பெரிதும் ஒத்திருக்கின்றன. தற்போது நம் பாவனையில் மற்றும் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளே அன்றும் இருந்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள இலட்சினை ஒன்றில் தட்டுக்களை ஏந்திய பெண்கள் காணப்படுவதுமாக இருந்துள்ளது. இது இன்று நாம் இறைவனுக்கு படையலிட்டு வழிபடுவது போல அன்றும் இவ்வழக்கம் கணப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுகிறது.
இறைவன் முன்னே குழந்தை ஒன்றை கையிலேந்திய பெண்ணின் உருவச்சிலை ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது. இது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வழக்கம் இருந்தமைக்கு சான்றாக திகழ்கிறது.
மேலும், இறைவனுக்கு பலியிடல் நடைமுறை அன்றும் காணப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக அங்கு கண்டெடுக்கப்பட்ட வாளேந்திய ஆடவன் ஒருவன் முன்னே மண்டியிட்ட பெண்ணின் இலட்சினையும், ஆட்டை பிடித்து நிற்கும் ஆடவனும் அவனுக்கெதிரே பலர் வரிசையாக வணங்குவது போன்றதுமான இலட்சினைகள் காணப்பட்டுள்ளன.
எருதின் முன்னே நடனமாடும் பெண் ஒருவரின் இலட்சினையும், மத்தளம் வாசிப்பவனும் ஆடும் பெண்ணும் உள்ள இலட்சினையும் அக்காலத்தில் இசை, நடனம் மூலம் கடவுள் வழிபாடு நிகழ்ந்ததை விளக்குவனவாக அமைகின்றன.
கண்டெடுக்கப்பட்ட தட்டுக்கள், கற்கள், வீட்டுச்சுவர்களில் புகை படிந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இவை அக்காலத்தில் தூப தீப வழிபாட்டு வழக்கம் காணப்பட்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றன. இதன் வளர்ச்சிப் போக்கே இன்றும் தூப தீப ஆராதனை வழக்கில் காணப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இவ்விடயங்கள் ஒன்றாக வைத்து நோக்கும் போது இன்று எமது வழக்கில் காணப்படும் வழிபடும் கடவுள்கள், வழிபாட்டு முறைகள், வழிபாட்டு சடங்குகள், சமய நம்பிக்கைகள் என்பன பழமைக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனால், எமது சமயமானது காலத்தால் முந்திய மூத்த சமயம் என்று கூறுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
ஏனைய சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் இவர் தான் என்று எவருமில்லை. இக்காலத்தில் தான் தோற்றுவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கூற கால எல்லையும் இல்லை.
அடுத்ததாக சங்க காலத்தில் இந்து சமயநிலை எவ்வாறிருந்தது என்பதை ஆராயலாம்.
சங்க காலம்
இக்காலத்தில் நிலங்களை ஐந்து திணைகளாக வகுத்து வாழ்க்கை நடத்தினர்.
இதனால், ஐவகை நிலங்களுக்கும் ஐவகை கடவுள்கள் என பிரித்து வழிபட்டனர்.
குறிஞ்சி – சேயோன், முல்லை – மாயோன், பாலை – கொற்றவை, மருதம் – வேந்தன், நெய்தல் – வருணன் ஆகிய கடவுள்கள் ஆகும்.
மேலும், சங்ககாலத்தில் வழிபாட்டின் போது வெறியாட்டம் நிகழ்ந்தமைக்கு சான்றுகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் இதனை இலகுவாக சாமியாடல் என்று கூறுவர்.
வெறியாட்டம் என்றால் வழிபாடுகள்,பூசைகளின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற மருள் நிலையை குறிக்கிறது. இதன் போது கடவுளின் செல்வாக்கிற்கு முழுமையாக ஆட்பட்டு வெறியாடி பாடி ஓரளவுக்கு கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி முன்னறிதல், நோய்நொடி பற்றி கணித்தல் போன்றன இடம் பெற்றன.
இன்றும் கோவிற்திருவிழாக்கள், பூசைகள் என்பவற்றின் போது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அருள் வெளிபட்டு வெறியாடுவதை நாம் அன்றாடம் காண முடிகிறது. சங்க இலக்கியங்களிலும் இவ்வெறியாடல் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் இக்காலத்தில் காணப்பட்டது. இன்றைய காலத்திலும் வேப்பம் மரம், ஆலமரம் போன்ற மரங்களின் அடியில் நடுகல் வைத்து காளி, ஐயனார், மாடசாமி, முனிசாமி, கருப்பஞ்சாமி போன்ற கிராமிய தெய்வங்கள் வழிபாட்டில் இருப்பது எடுத்துக் காட்டத்தக்கது.
இன்னும், ஆராயின் சங்கமருவிய காலத்திலும் இந்து சமய முறைகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்கமருவிய காலம்
இந்திரன், வருணன், அக்கினி, ஐயனார், சுப்பிரமணியர் போன்ற கடவுள்களின் தோற்றமும் வழிபாடும் காணப்பட்டது. அத்தோடு, இந்து கோவில்கள் பலவும் அமைக்கப்பட்டன.
இக்காலத்தில் அந்தணர்களின் வருகையும் காணப்பட்டது.
பல்லவர் காலம்
பல்லவர் காலத்தையும் எடுத்து சற்று நோக்கின், அங்கும் சிவன் கோவில்கள் பல அமைக்கப்பட்டன. மலைச்சரிவுகளை குடைந்து குடைவறை கோவில்கள் அமைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
மகேந்திரவர்மன் என்ற மன்னனே இக்குடைவறைக் கோவில்களை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் பல குகைக் கோவில்கள் அமைக்கப்பட்டன.
சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர் போன்ற இடங்களில் கோவில்களை அமைத்தார். மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோவிலில் பிரம்மா, சிவன், திருமால் என மூவரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவருக்கும் ஒரு அறை வீதம் மூன்று அறைகள் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
சோழர் காலம்
இதே போல், சோழர்கலத்தையும் சிறிது நோக்குவோம். இக்காலத்திலும் சைவசமயமானது சிறப்பாக வளர்ச்சியடைந்தது என்றால் மறுப்பில்லை. தமிழக மற்றும் வட இந்திய சைவர்களால் இந்து சமயம் நன்கு தழைக்க தொடங்கிற்று எனலாம்.
இக்காலத்திலேயே நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகளை தொகுத்தார். மேலும், சைவ சித்தாந்தம் தோற்றம் பெற்றது.
சோழர்களால் இந்து சமய கோவில்கள் பல எழுப்பப்பட்டன. தஞ்சை பெருங்கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஐராவதீஸ்வரர் ஆலயம், தில்லை நடராஜ கோவில், திருவாரூர் தியாகராஜஸ்வாமி திருக்கோவில், பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சாவூர் போன்றவற்றை எடுத்துக் காட்டலாம்.
முடிவுரை – Hindu Religion History in Tamil
இவற்றையெல்லம் வைத்து நோக்கும் போது இந்து சமயமானது மிகப்பழமை வாய்ந்த ஒரு சமயமாகும் என்றால் மிகையில்லை. தோற்றம் பெற்ற காலம் இதுதான் என சரியாக தெரியாத போதும் இங்கு கூறப்பட்டுள்ள காலங்களை வைத்து நோக்கும் போது, ஆதி சமயமே இந்து சமயம் தான் எனக் கூறக்கூடியதாக உள்ளது எனலாம்.
ஆகவே, இந்து சமயத்தின் தோற்றமானது வரையறுத்து எல்லைக்குற்படுத்த முடியாத பெருமையை உடையது. இதன் வளர்ச்சியும் அசூர வேகத்தில் தலைத்தூக்கி மிளிர்கின்றது. இத்தகைய அருமை பெருமமைகளுடைய சமயத்தை என்றும் சிறப்புற செய்வோம்.
இந்து மத வரலாறு (Hindu Religion History in Tamil) பற்றிய இந்த பதிவு உங்களுக்கு பல விளக்கங்களை அளித்திருக்கும் என நம்புகிறேன். இந்த பதிவு பற்றிய கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.
மேலும், புதிய பதிவுகளுக்கு எமது சமூக வலைத்தளங்களை (Facebook, X, Instagram and YouTube) Follow செய்யுங்கள்.
மேலும் வாசிக்க:
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com