தமிழ் மற்றும் சைவ வளர்ச்சிக்காக பணி புரிந்தவர்களுள் நாவலரும் மிக முக்கியமானவர் ஆவார். தமிழ் உரைநடை வளர்வதற்கு ஊன்றுகோலாய் இருந்தவரே நாவலர் என்றால் மறுப்பில்லை. முதன் முதலில் தமிழ் நூல்களை முறையாக பதிப்பித்த பெருமை இவரையே சாரும்.
இனி ஆறுமுக நாவலர் வரலாறு (Arumuga Navalar History in Tamil) பற்றி விரிவாக நோக்குவோம் வாருங்கள்.
பிறப்பும் வளர்ச்சியும்
யாழ்பாணத்து நல்லூர் எனும் ஊரில் 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி புதன் கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. தாயார் பெயர் சிவகாமி அம்மையார்.
நாவலரது இயற்பெயர் ஆறுமுகம் ஆகும். இவர் வீட்டின் இறுதி மகனாவார். இவருக்கு 4 மூத்த சகோதரர்களும், 3 சகோதரிகளும் இருந்தனர். இதில் 4 சகோதரர்களும் அரசாங்க உத்தியோகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஆரம்பக் கல்வியை பற்றி நோக்கும் போது, தனது ஐந்தாவது வயதிலேயே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினார். ஏனெனில், இவருக்கு ஐந்து வயதிலேயே வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
சுப்பிரமணிய உபாத்தியரிடம் தன் ஆரம்பக் கல்வியை தின்னை பள்ளிக்கூடத்தில் கற்கலானார். இவரிடம் மூதுரை போன்ற நீதி நூல்களையும், நிகண்டு மற்றும் தமிழையும் கற்றுத்தேர்ந்தார்.
நாவலர் 9 வயதில் தந்தையை இழந்தார். பின் நாவலரது கல்வி நடவடிக்கைகளில் அவரது மூத்த சகோதரனே அவதானத்தை செலித்த தொடங்கினார்.
நாவலரது உயர் கல்வி பற்றி பார்ப்போமானால், முதலில் சரவணமுத்து புலவரிடமும், பின்னர் சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தனது 12ஆவது வயதிலேயே தமிழிழும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார்.
யாழ்பாணத்திலே உள்ள வெஸ்லியன் மெதஸ்டிட் மத்தியக் கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றார். அவரது 19ஆவது வயதில் அப்பாடசாலையிலேயே ஆசிரியராக பணியாற்றினார்.
மேலும், அப்பாடசாலையில் நிறுவனராகவும் அதிபராகவும் இருந்த பேர்சிவல் பாதிரியாருக்கு கிறிஸ்து விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்க உதவியாளராய் பணியாற்றினார்.
பின், அப்பாதிரியாருடன் சென்னை சென்று அச்சிப் பணியை முடித்துக் கொண்டு மீண்டும் யாழ் நகர் திரும்பினார்.
சமயப் பணிகள்
சைவ சமயத்தையும், பண்பாடு கலாசாரத்தையும், தமிழையும் வளர்த்து ஓங்கச் செய்வதனையே கடமையாக கொண்டிருந்தார் ஆறுமுக நாவலர் (Arumuga Navalar Tamil). இதற்காக, நேரம் காலம் பார்க்காது அயராது உழைக்கலானார்.
சைவத்தை வளர்க்கும் முகமாக பிரசங்கங்கள் செய்ய எண்ணினார். இவரது முதல் பிரசங்கம் 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். இப்பிரசங்கங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பாரிய சமய விழிப்புணர்வு ஏற்படலாயிற்று.
முழு நேர சமயப்பணியை மேற்கொள்வதற்காக 1848இல் தனது ஆசிரியப்பணியை துறந்தார். மேலும், போர்த்துக்கேயர் காலத்தில் இடித்து அழிக்கப்பட்ட யாழ்பாணத்து நகுலேஸ்வரம் என்ற ஆலயத்தை புணர்நிர்மானிக்க உதவி கரம் நீட்டினார்.
பல இடங்களுக்கு யாத்திரைகள் சென்று சமய சொற் பொழிவுகள் மற்றும் சமய பிரசாரங்கள் செய்தார். இதனால், சைவம் மெல்ல மெல்ல வளர்ந்து எழத்தொடங்கியது.
1859ஆம் அண்டு வைகாசி மாதத்தில் திருவாசகம் மற்றும் திருக்கோவயாரை வெளியிட்டார். 1869ஆம் ஆண்டில் தமிழக இராமநாதபுர சமஸ்தானுக்கு சொற்பொழிவாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பள்ளிருக்கு, வேளூர், சீர்காழி ஆகிய இடங்களுக்கு சென்று சொற்பொழிவாற்றினார். 1879ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூசைத்தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இவரது இறுதி பிரசங்கம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
கல்விப்பணிகள்
ஆறுமுக நாவலர் (Arumuga Navalar Tamil) கோப்பாயில் 1870ஆம் ஆண்டு ஒரு பாடசாலையை ஆரம்பித்து தமது சொந்த செலவில் நடத்தி வந்தார் என்பது நாம் போற்றத்தக்கதொரு விடயமாகும்.
1871ஆம் ஆண்டு வண்ணார் பண்ணையில் ஜோன் கில்னர் எண்பவரால் வெசுலியன் என்ற ஆங்கில பாடசாலை நடத்தப்பட்டது.
இப்பாடசாலைக்கு விபூதி தரித்து சென்ற சைவ மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக, இது போன்ற பிள்ளைகளின் நலன் கருதி 1872ஆம் ஆண்டு தை மாதத்தில் வண்ணார் பண்ணையில் சைவ ஆங்கில பாடசாலை ஒன்றை நிறுவினார்.
ஆயினும், இப்பாடசாலை பொருளாதார வசதி குறைபாடு காரணமாக வெறுமனே 4 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டது.
மேலும், மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாலர் பாடம் 1 தொடக்கம் 4 வரையான பாகங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.
1849ஆம் ஆண்டில் நல்லூரில் வித்தியாசமான இயந்திரசாலை என்ற அச்சியந்திரசாலையை நிர்மாணித்து பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். இவ்வியந்திரத்தை இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்தார்.
1872ஆம் ஆண்டு கோப்பாய், புலோலி என்ற இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவினார்.
இறப்பு
1879ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி செவ்வாய் கிழமை அன்று நாவலரின் உடல் நலம் குன்றத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து மூன்று தினங்கள் நாவலரால் குளிக்க முடியவில்லை.
இவரது சுகயீனம் காரணமாக இவர் செய்கின்ற நித்திய சிவ பூசைகளை வேதாரணியத்து சைவாச்சாரியர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது.
21ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது 1879ஆம் அண்டு மார்கழி மாதம் 5ஆம் திகதி இரவு நேரம் தேவார அருட்பாக்களை ஓதும்படி கட்டளை இட்டார்.
இவை ஓதப்படும் தருனத்தில் சிதம்பரம், மதுரை, காசி, திருச்செந்தூர் முதலிய தலங்களின் விபூதியை தரித்து கொண்டு உருத்திராட்சம் அணிந்துக் கொண்டு கங்கா தீர்த்தம் உட்கொண்டார்.
பின் கைகளை தலையின் மேல் உயர்த்தி கூப்பிய படி இரவு 9 மணியளவில் உயிர் நீத்தார்.
இயற்றிய மற்றும் பதிப்பித்த இலக்கியங்கள்
சைவசமய நூல்கள்
- குருசிஷ்யக்கிரமம்
- தர்ப்பண விதி
- சிரார்த்த விதி
- நித்தியக்கரும விதி
- சிவாலய தரிசன விதி
- சவசமய சாரம்
- மருட்பா
கிறிஸ்தவமத கண்டன நூல்கள்
- சைவ தூக்ஷண பரிகாரம்
- மித்தியாவாத நிரசனம்
- சுப்பிரபோதம்
- வச்சிர தண்டம்
வசன நூல்கள்
- பெரியபுராண வசனம்
- திருவிளையாடற்புராண வசனம்
- கந்தபுராண வசனம்
- யாழ்பான சமய நிலை
- பெரியபுராண சூசனம்
பாடநூல்கள்
- பாலபாடம் 1
- பாலபாடம் 2
- பாலபாடம் 3
- பாலபாடம் 4
- சைவ வினாவிடை
- இலக்கண வினாவிடை
மூலப்பதிப்புக்கள்
- வில்லிபுத்தூரார் பாரதம்
- பெரியபுராணம்
- திருவாசகம்
- கந்தபுராணம்
- சேது புராணம்
- திருக்கோவையார்
- நால்வர் நான்மணிமாலை
- சிதம்பர மும்மணிக்கோவை
- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
- உவமான சங்கிரகம்
- இரத்தினச் சுருக்கம்
மூலம் மற்றும் உரை கொண்ட பதிப்புகள் சில
- நன்னூல் விருத்தியுரை
- நன்னூல் காண்டிகையுரை
- தொல்காப்பிய சூத்திரவிருத்தி
- சிதம்பர மான்மியம்
- தொல்காப்பிய சொல்லதிகாரம்
- சிவஞானபோத சிற்றுரை
- சிவராத்திரி புராணம்
- சுப்பிரமணிய போதகம்
- கொலை மறுத்தல்
- சூடாமணி நிகண்டுரை
- திருச்சிற்றப்பலக் கோவையுரை
புதிய உரை பதிப்புக்கள் சில
- ஆத்திச்சூடி
- கொன்றைவேந்தன்
- நன்னெறி
- நல்வழி
- வாக்குண்டாம்
- சைவசமய நெறி
- மதூரந்தாதி
- கோயிற்புராணம்
முடிவுரை: ஆறுமுக நாவலர் வரலாறு (Arumuga Navalar History in Tamil)
ஈழத்திரு நாட்டில் அவதரித்து கல்விக்காகவும் சமயத்திற்காகவும் தன்னலமற்ற சேவைகளை செய்த நாவலர் பெருமானை தமிழராகிய ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருத்தலும் போற்றிப் புகழ் பரப்புவதும் கடனாகும்.
இவர் கூறிய பாதை வழியே சென்று எம் மொழி மற்றும் எம் சைவம் என்பவற்றை ஓங்கச் செய்வோம்.
ஆறுமுக நாவலர் வரலாறு (Arumuga Navalar History in Tamil) பற்றிய இப்பதிவு பல தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன். எமது வலைதளத்தில் மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து வாசியுங்கள்.
அத்துடன், இக்கட்டுரை பற்றிய கருத்துக்களை கீழே தெரிவுயுங்கள். எமது Facebook, X, Instagram போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களையும் Follow செய்ய மறந்துவிடாதீர்கள்.
இதையும் வாசிப்போம்:
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com