காற்று மாசுபாடு | Air pollution in Tamil

Air pollution in Tamil

இன்றைய காலகட்டத்தினை நாம் எடுத்து பார்ப்பின், அதிகளவு பேசப்படும் தொனிப்பொருளாக இந்த காற்று மாசுபாடு (Air pollution in Tamil) காணப்படுகிறது என்றால் மிகையில்லை.

இந்நூற்றாண்டில் பெருகி வரும் சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தி திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனித அல்லது செயற்கை காரணிகளாலும் எரிமலை உமிழ்வு, தூசுப் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் காற்றானது நொடிக்கு நொடி அசுத்தமாக்கப்படுகின்றது என்பது மெய்யே.

இதனால், ஏற்படும் பின் விளைவுகளானது நோய் நொடிகளைத் தாண்டி மரணம் வரை கொண்டு செல்கின்றது.

அத்தகைய காற்று மாசுபாட்டினைப் பற்றி இனி நாம் சற்று விரிவாக நோக்கலாம்.

காற்று மாசுபாடு என்றால் என்ன?

பல்வகைப்பட்ட வாயுக்கள் நிறைந்த ஓர் கலப்பினையே காற்று என்கிறோம். இது போல, இரசாயணப் பொருட் கலவைகள், தூசுப் பொருட்கள் மற்றும் உயிரியற் பொருட்கள் வளிமண்டலத்தில் கலந்து காற்றினை அசுத்தப்படுத்துவது காற்று மாசுபாடு (Air pollution in Tamil) எனப்படும்.

இதனால், மானிட சமூகத்திற்கு மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இயற்கை சுற்றுச் சூழலுடன் வாழ்விடங்களும் பாதிப்படைகின்றன.

இதையும் வாசிக்க: 

காற்று மாசுபாடு காரணங்கள்

Air pollution in Tamil
Air pollution in Tamil

பெருமளவில் காற்றினை மாசுபடுத்துவது மானிடர்களேயாவர். நொடிப்பொழுதில் அதிகரித்து வரும் சனத்தொகையின் காரணமாக தேவைகளும் பாரியளவு அதிகரித்து விட்டன.

இதனால், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் செயற்பாட்டில் சூழலை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, இயற்கை வளங்கள் அனைத்தும் சடுதியாக பாதிக்கப்படுகின்றன.

இவ்வரிசையில் காற்றினை பாதிக்கும் காரணிகளை நாம் விரிவாகவும், விளக்கமாகவும் அவதானிக்கலாம்.

அனல் மின்சார நிலையங்களின் உற்பத்தியினால் காற்று பெருமளவில் மாசடைகின்றது.

விரிவாக நோக்கின், வெப்பத்திறனை தரவல்ல பொருட்களை எரித்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தியாகி, நீர் சுழற்சி சில்லு இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

வெப்பம் ஏற்றல் நடவடிக்கைகளுக்கு நிலக்கரி மற்றும் எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம், அதிகளவிலான காபன் வெளியேற்றப்பட்டு அவை காற்றுடன் கலக்கின்றன. இதன் காரணமாக நேரடியாக காற்று மாசடைகிறது.

அணுவாயுத சோதனைகள் மற்றும் வெடிப்புக்கள், அணு உலைகள் போன்றன காரணமாகவும் காற்று மாசுபாடு (Air pollution Tamil) ஏற்படுகிறது.

அதாவது, வெடிப்பினை ஏற்படுத்தவல்ல வெடிப் பொருட்கள் இச்செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு, அவை வெடித்ததும் இரசாயணம் கலந்த அப்புகை மண்டலம் காற்றுடன் கலந்து மாசடைதலை ஏற்படுத்துகின்றது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயண மற்றும் நச்சுப் புகை, சாம்பல்கள் என்பன பெருமளவில் வளிமண்டலத்தில் கலக்கப்படுகின்றன. இது காற்று மாசடைதலுக்கு முக்கிய ஏதுவாக அமைகிறது.

உலகில் பல்வகைப்பட்ட மற்றும் பல்தரப்பட்ட கணக்கிலடங்கா தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இங்கு பல்வேறுபட்ட இரசாயணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எண்ணிலடங்கா வாகனங்களின் பாவணை காரணமாகவும் வளி மாசடைகின்றது.

அதாவது, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பன அதிகளவில் தகனமடைந்து காபன் கலந்த கருவாயுவாகவும், புகை மண்டலத்துடனும் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளிவரும் காபன் மற்றும் தூசு என்பனவற்றால் பெரிதும் வளி மாசடைகின்றமை நோக்கத்தக்கது.

வரையறையில்லா காடழிப்பு செயற்பாடுகள் காரணமாகவும் காற்று மாசடைதலுக்கு உள்ளாகின்றது.

காடுகளை அழித்து பசுப்போர்வையை குறைப்பதனால், உறிஞ்சுகின்ற காபன் வாயுவின் அளவு குறைக்கப்பட்டு வளிமண்டலத்தில் இக்காபன் வாயு அதிகரிக்கப்பட்டு காற்றை மாசுபடுத்துகிறது.

குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகளின் பயன்பாடுகள் காரணமாகவும் வளி மாசடைகிறது.

எவ்வாறெனில், குளிர்விப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரோ புளோரோ காபன்கள் வளிமண்டலத்துடன் கலந்து ஓசோன் படைக்கு சென்று ஓசோனின் அளவை மிகத் துரிதமாக குறைகின்றன.

இதனால், புவியில் புறஊதாக் கதிர் தாக்கம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு காற்று மாசடைகிறது.

சிகரெட் போன்ற புகைப்பான்களின் பயன்பாடானது என்றும் காற்றை மாசுப்படுத்த வல்லன என்றால் மறுப்பில்லை.

இதில் இருந்து, வெளியேறும் பென்சோபைரின் (Benzo[a]pyrene) என்ற ஐதரோ காபன் வளியுடன் கலந்து மாசுபடுத்தலை ஏற்படுத்துகின்றது.

இயற்கைக் காரணியான எரிமலை வெடிப்புச் செயற்பாட்டினையும் கூறலாம்.

எவ்வாறெனில், ஓர் எரிமலை வெடிப்பதனால் பாரிய புகை மூட்டங்கள் தோன்றுகின்றன.

இதன்மூலம் சாம்பல், தூதுச் துணிக்கைகள் என்பனவும் சல்பர் ஈரொக்சைட்டும் வளியுடன் கலக்கப்படும். இதனால் வளி மாசடைகின்றது.

டயர் போன்ற இறப்பர் பொருட்கள், பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றன எரிக்கப்படுவதாலும், பாரிய குப்பை மேடுகள் மற்றும் கூளங்கள் எரிக்கப்படுவதனாலும் காற்று மாசடைகின்றமை (Air pollution Tamil) குறிப்பிடத்தக்கது.

காட்டுத் தீயும் வளி மாசடைதலை உருவாக்குகிறது. தீய வாயுக்களையும் தூசுத் துணிக்கைகள் மற்றும் சாம்பலையும் புகை மூட்டமாக கக்கும். இதன்போது, காற்று துரிதமாக மாசடைகின்றது.

நகரமயமாதலின் போது, மேற்கொள்ளப்படும் கட்டுமான நிர்மாணப் பணிகளின் போது வெளிவரும் சீமெந்து, தூசுத் துணிக்கைகள், இதர இரசாயணப் பொருட்கள் மூலமாகவும் காற்று மாசடைகின்றமை எடுத்துக் காட்டத்தக்கது.

தெளிக்கப்படும் பூச்சி மற்றும் களைக் கொல்லிகள், தூவப்படும் இரசாயண உரங்கள் போன்றவற்றாலும் காற்று மாசடைகின்றது.

எவ்வாறென்றால், தெளிக்கும் கருவிகள் மூலம் தெளிப்பதாலும் உரங்களை கைகளால் தூவும் போதும் அவை வீசுகின்ற காற்றுடன் கலக்கப்பட்டு காற்றின் இயற்கை தன்மை பாதிக்கப்பட்டு மாசுபடுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது.

இரசாயண நிறப் பூச்சுக்கள், இரசாயணத்தால் செய்யப்படும் வாசனைத் திரவங்கள், இரசாயண சுத்திகரிப்பு திரவங்கள், நுளப்பு, கரப்பான் பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றின் பயன்பாடும் காற்றை மாசுபடுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்

காற்று மாசுபாடானது பலதரப்பட்ட பக்க விளைவை ஏற்படுத்துகின்றது. அதாவது சுவாச நோய்கள், இரத்தத்தின் ஓக்சிசன் அளவை குறைத்தல் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது.

மேலும், ஆஸ்துமா, சுவாச புற்றுநோய், சுவாசப்பை அழற்சி என்பனவும் ஏற்படுகின்றன. இவை பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே பெரிதும் தாக்கவல்லன.

அத்துடன் தோல் நோய்கள், கண் எரிச்சல், அரிப்பு நோய்கள் போன்றனவும் ஏற்படுகின்றமையை குறிப்பிடலாம். அதேபோல, உயிர் பலிகளும் ஏற்படுகின்றமையையும் குறிப்பிடலாம்.

அமில மழை பொழிவினையும் எடுத்துக் காட்டலாம். எப்படியெனில், கனிம எண்ணெயினை எரிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் நைதரசன் ஆக்சைட்டு, சல்பர் ஆக்சைட்டு என்பன வளிமண்டலத்தில் உள்ள நீர் மற்றும் ஒட்சிசனுடன் தாக்கம் புரிந்து மழைத் துளிகளுடன் கலந்து அமில மழையாகப் பொழியப்படுகின்றன.

இதனால் மனிதன், விலங்குகள், தாவரங்கள் மற்றும் கட்டிடங்கள், நிலம் உட்பட அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும்.

புவி வெப்பமடைதலும் குறிப்பிடவல்ல சடுதியான பாதிப்பாகும். பச்சை வீட்டு வாயுக்களின் வெளிப்பாடானது வளிமண்டலத்திலுள்ள ஏனைய வாயுக்களின் சமநிலையை பாதிப்படையச் செய்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கின்றது.

ஓசோன் படை மண்டலம் பாதிப்படைதலையும் முன்வைக்கலாம். குளோரோ புளோரோ காபன் மற்றும் காபன் என்பன வளியில் சேர்ந்து ஓசோனை துளைக்கின்றன.

காற்று மாசுபாடு வகைகள்

காற்று மாசுபாட்டை பின்வருமாறு 2 வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலை மாசுபடுத்திகள்

முதல் நிலை மாசுபடுத்திகள் என்பது குறிப்பிட்ட மூலப்பொருளிலிருந்து நேரடியாக உருவாகி வெளியேற்றப்படும் மாசுபடுத்திகள் ஆகும்.

  • அமோனியா (NH3)
  • நைதரசனீரொக்சைட்டு (NO2)
  • காபன் மொனோக்சைட்டு (CO)
  • காபனீரொக்சைட்டு (CO2)
  • குளோரோ புளோரோ காபன்கள் (CFCs)
  • சல்பர் ஈரொக்சைட்டு (SO2)
  • துர்நாற்றங்கள்
  • தூசித் துணிக்கைகள்
  • கதிரியக்க மாசுபடுத்திகள்
  • நச்சு உலோகங்கள் (ஈயம் (Lead), பாதரசம் (Mercury))
  • ஆவியாகும் சேதன சேர்மானங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்

மற்ற காரணிகளின் இரசாயண எதிர்வினைகளின் விளைவாக வளிமண்டலத்தில் உருவாகும் மாசுக்கள் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் ஆகும். மேலும், இது முதல் நிலை மாசுபடுத்திகள் மற்றும் மற்ற வளிமண்டல கூறுகளின் இடைவினையாலும் நிகழலாம்.

  • தரை மட்ட ஓசோன் (Ground Level Ozone)
  • ஒளி வேதியல் புகை (Photochemical Smog)
  • பெரோக்ஸியசெட்டில் நைட்ரேட்டு (Peroxyacetyl Nitrate) போன்றவற்றை குறிப்பிட முடியும்.

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்  

Air pollution in Tamil
Air pollution in Tamil

காற்றினைத் தூய்மைப் படுத்துவதில் தாவரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன எனலாம். காபனீரொட்சைட் போன்ற கெடுதியான வாயுவை உறிஞ்சவல்லது தாவரங்கள்.

இதனடிப்படையில், காற்று மாசடைவதை தடுக்கும் முறைகளில் முக்கியமானதொன்றாக காடுகளை வளர்ப்பது இடம்பெறுகிறது.

இதையும் வாசியுங்கள்: 

தீய வாயுவை உறிஞ்சி தூய்மையான காற்றை தந்து வளிமண்டலத்தை மரங்கள் சுத்தப்படுத்துவதால் அதிகளவான மர நடுகையை மேற்கொள்வது அத்தியாவசியமான வழியாகும்.

வீடுகளில், பணிபுரியும் இடங்களில் வாசனைத் திரவியங்கள், இரசாயண சுத்திகரிப்புத் திரவங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்து இயற்கை பொருட்களை கொண்டு தூய்மைப் படுத்துவதையும் வாசனையேற்றுதலையும் செய்ய முனைய வேண்டும்.

தொழிற்சாலைகளில் இரசாயணம் கலந்த வாயு மற்றும் புகை என்பவற்றை வெளிவிடுவதில் காற்று மாசடைதலை தடுக்கும் தொழினுட்பங்களை மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்திக், பொலித்தீன், போன்ற பொருட்களின் பாவணையை குறைத்தும், அவற்றை எரிப்பதை தடுத்தும், மீள் சுழற்சி முறையில் பயன்படுத்தும் விதமான பொருட்களை பயன்படுத்தியும் காற்று மாசடைதலை தடுக்கலாம்.

மேலும், எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, எதிர்காலத்தில் சூரிய சக்தி மூலம் அல்லது மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்ள முனையலாம்.

குளிர்விப்பான்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை முறைகளை கையாண்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியும் CFC போன்ற கெடுதியான வாயு வெளியேற்றத்தை தடுக்கலாம்.

சிகரட் போன்ற புகைப்பான்களின் பயன்பாட்டை அரச திட்டங்கள் மூலம் தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் குறுகிய அளவாவது காற்று மாசடைதலை குறைக்க முயற்சிக்கலாம்.

அத்துடன், செயற்கை முறையில் இரசாயணத்தை பயன்படுத்தி செய்யப்படும் களைக் கொல்லிகள், பூச்சி மற்றும் கிருமிநாசினிகள், இரசாயண உரங்கள் போன்றவற்றை சடுதியாக நிறுத்தி இயற்கை முறையில் செய்யப்படும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி வளி மாசடைதலை தடுக்க தனிநபர் ஒவ்வொருவரின் பங்களிப்பை வழங்க முடியும்.

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் வளி மாசடைவு (Air pollution in Tamil) என்பது சாதாரணமாக இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மிகவும் மோசமான நிலையில் இது காணப்படுகிறது.

மனிதர்களும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வளியை மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், புவியில் வாழ்வது எதிர்காலத்தில் சவாலான விடயமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்நிலை தொடர்ந்து ஏற்படாமலிருக்க காற்று மாசுபடுதலை நாம் ஒவ்வொருவராக நிறுத்த வேண்டும்.

தனி நபர் ஒவ்வொருவரும், விழிப்புணர்வுடன் காற்று மாசடையாதவாறு செயல்பட்டால் ஒரு சமூகம், பின்பு ஒரு ஊர், தொடர்ந்து ஒரு நாடு என தொடர்ச்சியாக முழு உலகமும் இவ்வளி மாசடைவை தடுக்க இயலும்.

ஒவ்வொருவரும் பொறுப்புடனும் தமது எதிர்கால சந்ததியினரை நினைவிற்கொண்டும் செயற்பட வேண்டும்.

இவ்வாறு சூழலை எதிர்கால சந்ததிக்கும் சிறந்த முறையில் வாழ வழிவகுக்கும் வகையில் இன்று நாம் பயன்படுத்த வேண்டும் என ஒவ்வொருவரும் மனவுறுதி கொண்டு வாழ வேண்டும்.

வளியை பாதுகாத்து வருங்கால மக்களுக்கு நல்லதோர் பூமியையும் சுற்றுச் சூழலையும் வழங்குவோம்.

மேலும் சில பயனுள்ள தகவல்கள்: 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top